எங்கள் ஊர்த் திருவிழா
சித்திரை என்றாலே திருவிழா மாதம்… பள்ளி, பரிட்சை என்று நொந்துபோன சிறார்களுக்கு அது உயிர் புதுப்பிக்கும் ஆக்சிஜன் என்றால் மிகச் சரியாக இருக்கும். அக்காலத்தில் மழை பெய்து வேளாண்மை, அறுவடை செய்து மற்ற மாதங்கள் ஓடும். சித்திரை வெயிலில் வேலை செய்ய முடியா காரணத்தால் அது முழுதும் கொண்டாட்டங்கள், பண்டிகைகள் என்று கழி(ளி)த்தனர் நம் முன்னோர். அது 15 நாள் கொண்டாட்டம்… பூச்சொரிதல் தொடங்கி முளைப்பாரி திருநாள் வரை பாடு அமர்க்களப்படும். சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் ஆண்டுதோறும் ஊருக்குச் செல்வதே இதுபோன்ற திருவிழாக்களுக்குத்தான். சித்திரை மாத ஞாயிறுகளில் பூச்சொரிந்து, அடுத்த எட்டாம் நாள் காப்பு கட்டி, நடுவில் உள்ள ஒரு வாரம் ஒவ்வொரு தெரு மண்டகப்படி நடத்தி கூழ் ஊற்றும் செய்முறை செய்து, அடுத்த ஞாயிறு அன்று திருவிழா நடைபெறும். ...